*Scene PLOT : * Thanks : மதுரையம்பதி
மஹாபாரதத்தின் இறுதிப் பகுதியில் 3 உபதேசங்கள் நடைபெறுகின்றது. ஒன்று நாம் மிகவும் அறிந்த கீதோபதேசம், இன்னொன்று பீஷ்மர் தருமருக்கு அம்புப் படுக்கையில் இருந்தவாறு உபதேசித்த அறிவுரைகள் மற்றும் சஹஸ்ரநாமம். மூன்றாவதாக வருவது விதுரர் திருதராஷ்டிரருக்குக் கூறிய ஆலோசனைகள், இதுவே விதுர நீதி என்று போற்றப்படுகிறது. மஹா-பாரதத்தில் இந்தப் பகுதி உத்யோக பர்வத்தில்(Chapter 33-40) 605 ஸ்லோகங்களாக, 1200க்கும் மேற்பட்ட வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.
குருஷேத்திரப் போரை தடுக்க முயலும் திருதராஷ்டிரர் முதலில் சஞ்சயனைத் தூது அனுப்பி பாண்டவர்களிடத்துப் பேசி போரைத் தவிர்க்க முயல்கிறார். இரவு நேரத்தில் ஹஸ்தினாபுரம் திரும்பிய சஞ்சயன், தான் தருமரை சந்தித்துவிட்டு திரும்பி விட்டதாகவும், மறுதினம் அரசவையில் தூதுச் செய்திக்கான தருமரது பதிலைக் கூறுவதாகவும் திருதராஷ்டிரருக்குச் செய்தி அனுப்புகிறான். சஞ்சயன் என்ன பதிலைக் கொண்டு வந்திருப்பானோ என்ற கவலையில் இரவு நித்திரை வராது தவிக்கிறார் திருதராஷ்டிரர். நித்திரையில்லா அந்த இரவை பேசிக் கழிக்க முடிவு செய்து, பேசத்துணையாக விதுரரை அழைத்துவரச் செய்கிறார். இந்த நேரத்தில் திருதராஷ்டிரருக்கும் விதுரருக்கும் ஏற்பட்ட சம்பாஷணையே விதுர நீதி என்று அழைக்கப்படுகிறது.
விதுரர் வந்து அரசரை/திருதராஷ்டிரரை வணங்குகிறார். அச்சமயத்தில், திருதராஷ்டிரர் விதுரரிடம், "இனியவனே, நம்மில் நீதான் சாஸ்திரங்களையும், புனித நூல்களையும் நன்கு படித்து தேர்ச்சி பெற்றிருக்கிறாய். சஞ்சயன் நாளை அரசவையில் சொல்லக்கூடிய செய்தி என்னவாக இருக்கும்என்பதை நினைத்து எனக்கு உறக்கம் வரவில்லை. உடல் முழுதும் தகிப்பாகவும், உதறலாகவும் இருக்கிறது. அவன் என்ன செய்தி கொண்டுவந்துள்ளானோ?, தருமபுத்திரனின் விருப்பம் என்னவாக இருக்கும் என்பதும் உன்னால் மட்டுமே ஊகித்துச் சொல்ல முடியும் என்று தோன்றியதால் உன்னை இங்கு அழைத்தேன். உனது எண்ணங்களைச் சொல்வாயாக" என்று கூறுகிறார்.
இந்த இடத்தில் திருதராஷ்டிரருக்குப் பதிலாக விதுரர் கூறுவதாக இருப்பதுதான் விதுர நீதி என்று போற்றப்படுகிறது. இந்தப் பகுதி கேள்வி-பதிலாக இருந்தாலும், பெரும்பாலும் விதுரர் தமது பதிலில் அரசன் செய்ய வேண்டிய கடமைகளையும், அறநெறி வழுவாத அரசு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாகஎடுத்தியம்புகிறார். அரசர் பாண்டவர்களையும் தன் மக்களாகவே கருத வேண்டும் என்றும், பாண்டவர்களுக்கு அரசுரிமை அளிக்க வேண்டும் என்பதை தர்ம-சாஸ்திரம் மற்றும் வேதகால ரிஷிகளது கதைகளையும் உதாரணமாகக் காட்டி விளக்குகிறார்.
No comments:
Post a Comment